முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றுமன்தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர். இந்நிலையில் படைச்சிப்பாய் அருகிலுள்ள படைமுகாமிற்குள் தப்பிச் சென்றுள்ளார். குறித்த படைச்சிப்பாய் ஓடி வருவதைப் பார்த்து படைமுகாமில் காவலில் நின்ற சிப்பாய் முகாமின் பிரதான வாயிலை திறந்து சிப்பாயை உள்ளே விட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் முகாமிற்குள் செல்ல முடியாத நிலையில் திரும்பியுள்ளனர்.
எனினும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணைகள் நடத்தியுள்ளதுடன், குறித்த வீட்டு உரிமையாளரை நேற்றுக் காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைத்தனர். நேற்றுக்காலை குறித்த வீட்டாருக்கு அழைப்பினை எடுத்த பொலிஸார் விசாரணைக்கு வரவேண்டாம். படையினருடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற படையினர், சிப்பாய் வீட்டுக்குள் வந்தது உண்மைதான் ஆனால் அந்த சிப்பாய் யார் என்பது தெரியவில்லை. வாயிலில் காவலுக்கு நின்ற சிப்பாயும் உண்மையை சொல்ல மறுக்கின்றான். எனவே சமாதானமாக போங்கள் என கேட்டுள்ளனர். ஆனால் சமாதானத்திற்கு மக்கள் முழுமையான மறுப்பினை தெரிவித்துள்ளனர்.