சுமார் இரண்டு மாதங்களாக கடலில் தன்னந்தனியாகத் தவித்துவந்த ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீன்களை உண்டும் மழை நீரைக் குடித்தும் அவர் உயிரைத் தக்கவைத்திருந்தார்.
வியாழக்கிழமையன்று நார்த் கரோலினாவுக்கு 200 மைல் தொலைவில் தவித்துக்கொண்டிருந்த லூயிஸ் ஜோடர்ன் என்ற 37 வயது நபரை அந்த வழியாகச் சென்ற ஜெர்மன் நாட்டு டேங்கர் கப்பல் ஒன்று பார்த்தது.
அவர் சென்ற 35 அடி நீளமுடைய படகு தலைகீழாகக் கவிழ்ந்துவிடவே, அதன் முதுகுப் பகுதியில் அமர்ந்திருந்த அவர், இப்போது மீட்கப்பட்டுள்ளார்.
ஜனவரி மாத இறுதியில் அவர் காணாமல் போய்விட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜோர்டன் மீட்கப்பட்ட பிறகு, அவரிடம் பேசிய, அவரது தந்தை, “நான் உன்னை இழந்துவிட்டேன்” என்றே நினைத்தேன் என்று கூறினார்.
ஜெர்மன் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்தபடி தந்தையிடம் பேசிய ஜோர்டன், தான் இப்போது நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
அட்லாண்டிக் கடலில் தவித்துவந்த ஜோர்டன், மீன்களை பச்சையாக உண்டும், மழை நீரைக் குடித்தும் உயிர் பிழைத்திருந்ததாக மியாமியிலிருக்கும் கடலோரக் காவல் படையின் அதிகாரியான ரியான் தாஸ் கரோலினாவின் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
ஹுஸ்டன் எக்ஸ்பிரஸ் என்ற ஜெர்மானியக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் விர்ஜீனியாவின் நார்ஃபோக்கில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுபோல, ஒருவர் தாக்குப்பிடித்ததில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தெற்குக் கரோலினாவில் இருக்கும் கான்வே என்ற இடத்திலிருந்து தன்னுடைய ஏஞ்சல் என்ற படகில் மீன் பிடிப்பதற்காக ஜனவரி 23ஆம் தேதி அவர் புறப்பட்டார்.
ஆனால், அந்தப் படகு ஏன் கவிழ்ந்தது என்பது தெளிவாகவில்லை.