வீட்டுக்கு வந்து தனது பெற்றோரை கடுமையாகப் ஏசி, அவர்களை தாக்கியதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேனவை கோடரியால் தாக்கினேன் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இஷார லக்மால் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
வெலி ராஜு என்றழைக்கப்படும் பிரியந்த சிறிசேனவின் படுகொலைச் சந்தேகநபராக லக்மால் சபுதந்திரி, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு வாக்குமூலமளித்துள்ளார்.
தனது வாக்குமூலத்தில் சந்தேகநபர் மேலும் கூறியுள்ளதாவது,
‘வெலி ராஜுவும் நானும் நீண்ட காலங்களாக நல்ல நண்பர்களாக இருந்தோம். எந்தவொரு இடத்துக்கும் நாமிருவரும் சேர்ந்தே செல்வோம். இருப்பினும், எம்மிருவருக்கும் இடையில் தனிப்பட்ட காரணத்துக்காக அண்மையில் முரண்பாடு ஏற்பட்டது.
அன்றுமுதல் அவர் என்னை தொலைபேசியில் அழைத்து திட்டுவார். போதாக்குறைக்கு, என்னுடைய வீட்டுக்கும் வந்து என்னுடைய பெற்றோரிடம் கூறி திட்டுவார். பெற்றோரையும் திட்டிச் சென்றிருந்தார்.
சம்பவம் இடம்பெற்ற நாளன்றும் வெலி ராஜு என்னுடைய வீட்டுக்கு வந்திருந்தார். என்னுடைய பெற்றோரை அவர் அப்போது கடுமையாகப் ஏசினார். அச்சுறுத்தினார். அடித்து துன்புறுத்தினார். இதன்போது என்னுடைய பொறுமை எல்லை மீறியது. கோபத்தை தாக்கிக்கொள்ள முடியாமல், வீட்டிலிருந்த கோடரியை எடுத்து அவரது தலையில் தாக்கினேன்’ என்று சந்தேகநபரான இஷார லக்மால் சபுதந்திரி, வாக்குமூலமளித்துள்ளார்.
இந்நிலையில், பிரியந்த சிறிசேனவின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கொழும்பு உதவி சட்டவைத்திய அதிகாரி ஜே.எம்.ஹேவகேயின் சட்டவைத்திய அறிக்கையில், ‘கூரிய ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டுள்ளமையால் மூளையின் உட்பகுதிக்கு இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், தனது கணவர் பிரியந்த சிறிசேனவின் கொலை, திட்டமிடப்பட்ட சதியே என பிரியந்த சிறிசேனவின் மனைவியான கீதாஞ்சலி சமன்குமாரி தெரிவித்துள்ளார்.
எனது கணவரின் கொலையின் பின்னால் பல சதிகாரர்கள் உள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்ததில்லை. வாகனம் பழுதுபார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரான இவர் தொடர்பில் எனக்கு தெரியாது. இருப்பினும், குறிப்பிட்ட வாகனம் பழுதுபார்க்கும் நிலையம், தனது பணத்திலேயே கட்டப்பட்டது என எனது கணவர் என்னிடம் கூறியுள்ளார் என்றும் பிரியந்தவின் மனைவி கூறியுள்ளார்.
மேலும், அந்த நபருக்கு எனது கணவர், பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளார் என்றும் அப்பணத்தை பெற்ற அந்நபர், அந்த பணத்தை மீண்டும் திருப்பிக்கொடுக்க விரும்பாததாலேயே இந்த கொலையை புரிந்துள்ளார் என்றும் பிரியந்தவின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.