Ad Widget

‘யேமனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்’

யேமனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகத்துக்கு அழைத்துவரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

inter-ministerial_meeting_discusses_all_aspects

இந்திய கடல் மற்றும் வான் படைகளின் விமானங்களும் கப்பல்களும், மேலதிகமாக ஏர் இந்தியா விமானங்களும் மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக யேமனின் கடற்கரை நகரான ஏதனிலிருந்து 400 இந்தியர்களை கப்பல் வழியாக ஜிபோட்டி நாட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலம், யேமனின் ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த மீட்புப் பணியை மேற்பார்வையிட வெளியுறவுத்துறையின் இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் நாளை காலை ஜிபோட்டி பயணமாவதாகவும் சையத் அக்பருதீன் கூறினார்.

கேரளா மாநிலத்தின் கொச்சின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ள இரண்டு கப்பல்களில் மொத்தம் 1100 பேரை மீட்க முடியும் என்றும் இந்தக் கப்பல்கள் ஐந்து நாட்களில் குறிப்பிட்ட பகுதியை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

யேமனின் பிராந்திய தலைவர்களுடன் தொடர்ந்து இந்தியா தொடர்பில் உள்ளதால் விரைவில் அனைவரையும் மீட்க முடியும் என்றும் சையத் அக்பருதீன் கூறினார்.

ஏற்கனவே 80 இந்தியர்கள் ஜிபோட்டி வழியாக நாட்டிற்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts