விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு விஜய் தனது 59-வது படத்தை இயக்கும் வாய்ப்பை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லிக்கு வழங்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், ராதிகா சரத்குமாரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் ராதிகாவை நேரில் சந்தித்து பேசிய அட்லி, இப்படத்தின் கதையை அவரிடம் கூறியுள்ளார். அவரும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பாரதிராஜா கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாண்டியநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில், அட்லி-விஜய் படத்தில் அவர் நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். ‘தலைவா’ படத்திற்கு பிறகு விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
ஏற்கெனவே, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராதான் நடிப்பார் என்று புரளி கிளம்பியது. ஆனால், கடைசியில் சமந்தா-எமிஜாக்சன் என இரண்டு நாயகிகள் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை மே மாதத்தில் தொடங்க இருக்கின்றனர்.