கமல் ஹாஸனுக்கு தெரியாத விஷயமே கிடையாது. அவர் எல்லாம் அறிந்தவர் என்று பாராட்டினார் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன்.
கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாதில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் நடிகர் கமல் ஹாஸன், நாயகிகள் ஆன்ட்ரியா, பூஜா குமார், கமல் மகள் ஸ்ருதி ஹாஸன், நடிகை கவுதமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.
அவர் கூறுகையில், “சினிமாவில் என்னை அண்ணா என்று உரிமையுடன் அழைப்பவர்களில் ஒருவர் கமல்ஹாஸன். மகா அற்புதமான கலைஞர். அவருக்குத் தெரியாத வித்தைகளே கிடையாது. அவர் ஒரு கலைக்களஞ்சியம் மாதிரி.
அவரிடமும் இயக்குநர் பாலச்சந்தரிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். தெலுங்கில் கமல் நடித்து சாதனைப் படைத்த சாகர சங்கமம், சுவாதி முத்யம் போன்ற படங்களின் வரிசையில் இந்த உத்தம வில்லனும் அமையும் என நம்புகிறேன்,” என்றார்.