கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) வலியுறுத்தினர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர்.
இதன்போது அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ‘கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவு பெறாமையினால் இப்பகுதி மக்கள் இதுவரை மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளனர்’ என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ‘பளை பகுதியில் இரண்டு கிராமஅலுவலர் பிரிவுகள் கண்ணிவெடி அகற்றப்படாததால் அப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றி மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பரவிப்பாஞ்சானில் 55 குடும்பங்களும் கிருஸ்ணபுரத்தில் 60 குடும்பங்களும் பளைப்பகுதியில் 8 குடும்பங்களும் வாழ்ந்த அவர்களது சொந்த காணிகள், தற்போது இராணுவத்தினர் சுவீகரித்து வைத்துள்ளனர். அவற்றை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுமார் 6,000 மேற்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன. அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் மத்திய வகுப்புத்திட்டக் காணிகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் ஆயிரத்து 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்களும் காணி உரிமம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 3000 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகள் புனரமைக்கப்படாமல் உள்ளன. உள்ளுராட்சி திணைக்களங்களுக்கு நிதியுதவிகளை வழங்கி அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும்’ அவர் கோரினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கூறுகையில், ‘பரவிப்பாஞ்சான் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த அவர்களது காணிகளில் அவர்கள் மீள்குடியேறவும், வீடுகள் இன்றி வாழும் மக்களுக்கான வீடுகள் இடைப்பதற்கும், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் போராளிகள் ஆகியோரின் குடும்ப பொருளாதாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.
சில இடங்களில் முன்னாள் போராளிகள், ஏனையவர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.