அன்றாட வாழ்வில் சிக்கலை சந்திக்கும் பெரும்பாலானோர், அதிலிருந்து மீள வழி தெரியாத போது தற்கொலையை தான் தங்களின் ஒரே தீர்வாக தேர்ந்தெடுக்கிறார்கள். இதை தடுக்க கவுன்சிலிங், சேவை மையங்கள் என பல வழிகளை அரசுகள் பயன்படுத்தி வந்தாலும், தற்கொலையை கட்டுப்படுத்த முடியவில்லை.
தென்கொரியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள், அரசுக்கும், பெற்றோருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த விபரீத முடிவுகளில் இருந்து மாணவர்களை விடுவிக்க, அந்த நாட்டு அரசு ‘செல்போன் அப்ளிகேஷன்’ ஒன்றை உருவாக்கி உள்ளது.
ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் இந்த அப்ளிகேஷன், மாணவர்கள் மனரீதியாக நெருக்கடியில் இருக்கும் போது, அவர்களின் பெற்றோருக்கு எச்சரிக்கை அளிக்கும். அதாவது, இந்த அப்ளிகேஷன் உள்ள செல்போனை பயன்படுத்தும் மாணவர், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் தேடல் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்கொலை தொடர்பான தகவல்கள் ஏதாவது வைத்திருந்தால் உடனே அது குறித்து அந்த மாணவரின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பும்.
இந்த அப்ளிகேஷனை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது கட்டாயம் இல்லை என்றாலும் பெரும்பாலான பெற்றோர் இதை பயன்படுத்துவர் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.