வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளில் 1,100 நிலப்பரப்பு அடுத்த ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக விடுவிக்கப்படும்.என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மூவர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. சம்பூர் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 800 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
எனவே, சம்பூர் காணிகள் விடுவிப்பு தொடர்பில் கண்காணிக்க இன்று நான் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கு, கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசு கூடிய அக்கறை செலுத்தி வருகின்றது. காணிகளை விடுவிப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் காணி அமைச்சின் செயலாளர் மூன்று அமைச்சுக்களின் கீழ் முக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு அமைவாகவே வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவற்றினை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வலி.வடக்கில் 1,100 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய 231 நிலப்பரப்பு கடந்த வாரங்களில் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் 200 ஏக்கர் நிலப்பரப்பை எதிர்வரும் 23ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளோம்.
மேலும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மற்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
எனவே அடுத்த ஒரு மாத காலத்தினுள் ஏனைய 700 ஏக்கர் காணிளையும் முழுமையாக அம்மக்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.