கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படும் 450 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர் எதிர்வரும் திங்கட்கிழமை (23) கையளிக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, அக்காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதியும் பிரதமரும் கையளிப்பார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று, யாழ். மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வசாவிளான் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மக்களை அவர்களின் காணிகளை பார்வையிடுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருகின்றார்’ எனக் கூறினார்.
அத்துடன், ‘காணிகளை பார்வையிடவுள்ள பொதுமக்களை, வசாவிளான் கிழக்கு குட்டியப்புலம் பகுதிக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். கட்டுவன், குரும்பசிட்டி, வறுத்தனை விளான், பனை வீமன்காமம் ஆகிய கிராமஅலுவலர் பிரிவு காணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காணிகள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி வளலாயில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில், ஜனாதிபதி, பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். வளலாய் மற்றும் வசாவிளான் ஆகிய பகுதிகளில் மீளக்குடியமர்வதற்கு 500 குடும்பங்கள் இதுவரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக’ மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் மேலும் கூறினார்.