இலங்கையில் உள்நாட்டுப்போர் உக்கிரமடைந்து காணப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாகச் செயற்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ‘பீல்ட் மார்ஷல்’ பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் இராணுவ அதிகாரியொருவர் பீல்ட் மார்ஷலாகத் தரமுயர்த்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிரணியிலுள்ள சிலர் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். இலங்கை பிளவுபடுவதைத் தடுத்து, நாட்டைப் பாதுகாப்பதற்குத் தலைமைத்துவம் வழங்கிய சரத் பொன்சேகா, மூன்று தடவைகள் தாக்குதலுக்கு உள்ளானபோதும், நாட்டைக்காக்க அர்ப்பணிப்புகளைச் செய்தவர் என்ற வகையில், அவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது என்று பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இராணுவத்தில் அதி உச்ச தரமான பீல்ட் மார்ஷல் பதவி, ஐந்து நட்சத்திர ஜெனரல் பதவிக்கு நிகரானது. இந்தப் பதவியை வகிப்பவர் இராணுவ சேவையில் ஓய்வுபெறாது – நிரந்தரமாகச் சேவையில் இருப்பார். அத்துடன், இராணுவ நிகழ்வுகளில் சீருடையுடன் அவர் பங்கேற்கலாம்.
கெளரவ பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிப்பவர், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடுபவராக இருக்கமாட்டார். பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் இராணுவ சட்டத்தின்கீழ் பணியாற்றுபவர் அல்லர். பீல்ட் மார்ஷல் ஒருவர் நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் கொண்டிருக்கும் உரிமைகளைக் கொண்டிருப்பார்.
ஜனநாயக ரீதியில் அரசியலில் ஈடுபடும் சுதந்திரமும் அவருக்கு இருக்கும். அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்குள்ள அந்தஸ்தை அவர் கொண்டிருப்பார். பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்வு பெறும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 4 அதிகாரிகள் அடங்கலாக 130 படையினரின் பாதுகாப்பு அளிக்கப்படும். வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சம்பளம் வழங்கப்படும். வாழ்நாள் முழுவதற்கும் அவருக்கான பணியகமும், அதற்கான பணியாளர்களும் வழங்கப்படும்.
பீல்ட் மார்ஷல் ஒருவர் உயிரிழந்தால், இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதுடன் 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்படும். உத்தியோகபூர்வ வதிவிடம், போக்குவரத்து வசதிகள் என்பனவும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்.
பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் கொடுப்பனவும் அதிகாரபூர்வ வதிவிடமும் வழங்கப்படும். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொதுவேட்பாளராகக் களமிறங்கிய சரத் பொன்சேகா, தேர்தலுக்குப் பின்னர் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், சர்வதேச அழுத்தங்களால் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வாக்குரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படுவதுபோல, கடற்படைக்குத் தலைமை தாங்கிய தனக்கும், அவருக்கு இணையான பதவி வழங்கப்படவேண்டும் என்று முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தில் பீல்ட் மார்ஷல் பதவிபோல, கடற்படையில் அதிஉச்சப் பதவியாக ஃபிலீட் அட்மிரல் பதவி இருக்கின்றது.