ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரச் சென்றவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பப்புவா நியு கினீயின் மனுஸ் தீவு அகதி முகாமில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை காணப்படுவதாக, அங்கு சென்று தகவல் சேகரித்துள்ள ஊடகவியலாளர் இயய்ன் பிளாக்வெல் கூறுகிறார்.
மனுஸ் தீவில் உள்ள இந்த அகதிகள் தடுப்பு முகாமில் ஆயிரத்துக்கும் அதிகமான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அது சுகாதாரக் கேடான ஒரு இடமாக உள்ளதாக தடுப்பு முகாமுக்கு ஐந்து முறை சென்று ஆய்வுகளை மேற்கொண்ட ஊடகவியலாளர் பிளாக்வெல் கூறுகிறார்.
“இது குறித்து விபரித்த அவர், இந்தத தடுப்பு முகாம் வெப்பம் தகிக்கும் இடமாகவும், அடிப்படை வசதிகளற்ற இடமாகவும் உள்ளது. இங்கு மலேரியா தாக்கத்தால் மிக மோசமான சுகாதார நிலைமை காணப்படுகிறது. சிறிய அறைகளில் அளவுக்கு அதிகமானோர் திணிக்கப்பட்டுள்ளனர். இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன் அங்குள்ளவர் உளநலம் சார்ந்த வியாதிகளுக்குள்ளாகியுள்ளனர் எனக் கூறினார். தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் குதித்துள்ளனர். அகதிகள் ஜன்னல் வசதிகளற்ற கப்பல் கொள்கலன்களினுள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் விளக்குகள் பழுதடைய இருளினுள் வாழ்கின்றனர்.”
அகதிகள் மற்றும் முகாம் ஊழியர்களின் செல்லிட தொலை பேசிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற முதல்தர தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முகாமின் நிலைமை குறித்து தாங்கள் தகவல் சேகரித்துள்ளதாகஅகதிகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் சார்பாக பேசிய இயன் ரிண்டூல் கூறினார்.
அங்கு தற்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த வருடம் அங்கு அகதிக் கோரிக்கையாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, 40 தொடக்கம் 50 வரையான செல்லிட பேசிகள் பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
முகாம்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியில் தெரியவராமல் பார்த்துக்கொள்ளவே ஆஸ்திரேலிய அரசு விரும்புகிறது என ரிண்டூல் கூறினார்.
அகதி முகாம் – ஒரு பின்னணி
மனுஸ் தீவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 2001ல் அவுஸ்திரேலியாவின் முந்நாள் பிரதமர் ஜோன் ஹொவர்ட்டின் ஏற்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
அது பின்னாளில் தொழில்க்கட்சிப் பிரதமர் கெவின் ரட் பதவியேற்றதை தொடர்ந்து 2008ல் மூடப்பட்டது.
ஜூலியா கிலார்ட் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து 2011ல் மறுபடியும் இது மீளத் திறக்கப்பட்டது.
மனுஸ் தடுப்பு முகாம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் விமர்சனங்கள் தொடர்ந்த நிலையிலும், அங்கு பப்புவா நியு கினியின் ஊடகவியலாளர்கள் தவிர்ந்த வேறு நாட்டு ஊடகவியலாளர்களுக்கு அங்கு செல்ல விசா வாங்க வேண்டும் என்பதோடு, பப்புவா நியு கினி குடிவரவுத் துறையின் முன் அனுமதியையும் பெற வேண்டியிருந்தது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மிக அரிதாகவே அனுமதி வழங்கப்பட்டது.
மானுஸ் தீவு மற்றும் அகதிகள் குறித்த கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய அரசு மழுப்பலாகவோ அல்லது உதாசீனத்துடன்தான் பதிலளித்துவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் 2014 இன் ஆரம்பத்தில் மனுஸ் அகதிகள் தடுப்பு முகாமினுள் வெடித்த கலகம் முகாமினுள் என்ன நடக்கிறது என்ற கேள்விகளை அடையாளப்படுத்தி நின்றது என்றே கூறலாம்.
இந்த கலவரத்தின்போது, அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் 60ற்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானதுடன் 23 வயதான இரானிய தஞ்சக் கோரிக்கையாளரான ரெஸா பெரட்டி கொல்லப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையும் அகதிகளின் ஆதார அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.
ஆனால் அங்கு பணிகளில் ஈடுபட்டிருந்த இரட்சணிய சேனை ஊழியர் ஒருவர் தலையில் தாக்கியதாலேயே இரானிய இளைஞர் கொல்லப்பட்டார் என கடந்த வருடம் மே மாதம் ஆஸ்திரேலியாவின் முந்நாள் அரச உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான ராபர்ட் கோர்னலினால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த செப்டம்பரில் மற்றுமொரு இரானிய அகதித் தஞ்சக் கோரிக்கையாளர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.