வடக்கு, கிழக்கை பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் த.தே.கூ. க்கு இல்லை

வடக்கையும் கிழக்கையும் பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழன் தமிழனாக தன்மானத்துடன் சுயநிர்ணய ஆட்சியில் வாழ்வதே தமது நோக்கமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர்தின நிகழ்வு, மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் புதன்கிழமை (11) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அமைச்சுப் பதவிகளும் ஏனைய விடயங்களும் எமக்கு கிடைத்துள்ளமை தற்காலிக விடயங்களே தவிர, அவை நிரந்தரமான தீர்வு அல்ல.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற 8 தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

தார் வீதிகளுக்கும் கொங்கிறீட் வீதிகளுக்கும் நாம் அரசியல் செய்யவில்லை. எமது மக்களின் சுயநிர்ணய வாழ்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்துகொண்டிருக்கின்றது. அபிவிருத்திகள் நீடித்து நிலைத்திருக்கவேண்டும். எமக்குரிய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தால், தற்போது ஐ.நா. சபையின் வாசல் கதவை தட்டும் நாம், அந்தக் கதவைத் திறந்து உள்ளே போகும் சந்தர்ப்பம் ஏற்படும்’ என்றார்.

Related Posts