ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கை மற்றும் இசை குறித்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஆவணப்படம் ’ஜெய் ஹோ’. இது 60 நிமிட ஆவணப்படமாக உருவாகிறது.
இதில் ஏ.ஆர் ரகுமான் பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா உள்பட பலரது பேட்டிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், ஏ.ஆர்.ரகுமானிடம் இணைந்து பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோரின் பேட்டிகளும், பல்வேறு நாடுகளில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சிகளின் தொகுப்பும், அவருடைய குடும்ப வாழ்க்கையையும் தொகுத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவண படத்தை உமேஷ் அகர்வால் இயக்கியிருக்கிறார். இவர் இந்தியாவில் பணத்திற்காக செய்தி வெளியிடுவதை மையமாக கொண்டு உருவான, புரோகனிங் நியூஸ் – மீடியா, மணி (பணம்) மற்றும் மிடில்மென் (இடை தரகர்) போன்ற டாக்குமெண்ட்ரி (ஆவண படம்) படங்களை இயக்கியவர்.
இந்த ஆவண படத்தின் இரண்டரை நிமிட டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆவணப்படம் நியூயார்க்கில் திரையிடபட்டது. இதில் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு இதழ் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் உமேசும், ஏ.ஆர். ரகுமானும் கலந்து கொண்டனர். அங்குள்ள பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த ஆவணப்படம் இந்தியாவில் வருகிற ஏப்ரல் மாதம் திரையிடப்படுகிறது.