யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் அக்காணிகளில் பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் இன்று தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் புதன்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘6 கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரம் ஏக்கர் காணியில் 1,353 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளனர். அவர்களின் குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன இதற்குள் அமைந்துள்ளன.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) வளலாய் ஜே – 284 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள 232 ஏக்கர் காணிகளை பார்வையிடுவதற்காக 272 குடும்பங்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்ட 272 குடும்பங்களும் வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று தங்கள் காணிகளை பார்வையிட்டு காணிகளை துப்பரவு செய்யலாம்.
272 குடும்பங்களில் 253 குடும்பங்கள் யாழ். மாவட்டத்தில் வசிக்கின்றன மிகுதி 19 குடும்பங்களும் வெளிமாவட்டங்களில் வசிக்கின்றன.