உலகளவில் இசைத்துறையில் நோபல் பரிசு என்று கருதப்படும் போலார் மியூசிக் விருது இந்த ஆண்டு இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தின் பிரபல தாள வாத்தியக் கலைஞரான டேம் எவ்லின் க்ளெனி மற்றும் அமெரிக்காவின் நாட்டுப்புற இசைக் கலைஞர் எமிலோ ஹாரிஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் எவ்லின் க்ளெனி முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவுக்கு கேட்கும் திறணை இழந்தவர் என்பதும், அப்படிப்பட்ட ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவிலின் தனது 12 வயது முதல் கேட்கும் திறணை இழந்திருந்தார் என்பதுடன் இசைக்காக வழங்கப்படும் இந்த உயரிய விருதை அவர் பெறுகின்றமை அனைவரையும் பெரும் மகிழ்சசியடைய செய்துள்ளதுடன் ஏனைய கலைஞர்களுக்கு அது ஊக்கமளிப்பதாகவும் உள்ளது என்று விருது வழங்கும் குழுவினர் கூறுகிறார்கள்.
தாளவாத்திய இசையில் உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளார் எவ்லின் க்ளெனி
விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்றாலும் இசைத்துறையில் தான் இன்னும் எட்டவேண்டிய உச்சங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன என்று அவர் கூறுகிறார்.
எவ்லின் க்ளெனி முழுமையாக கேட்கும் திறணை பெருமளவில் இழந்திருந்தாலும், தாள வாத்தியங்கள் மீதான காதல் மட்டும் அவருக்கு சிறிதும் குறையவில்லை.
தாள வாத்தியங்கள் இசைப்பதை முழு நேர தொழிலாக ஆரம்பிக்கும் போது அதற்கான வாய்ப்புகள் மிக எளிதாகவே காணப்பட்டதாக கூறிய ஐம்பது வயதை எட்டிய எவிலின் இந்த அங்கீகாரம் தமக்கு வாய்ப்புக்களை மென்மேலும் பெருக்கிக் கொடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
முப்பதுக்கும் அதிகமான இறுவெட்டுக்களை வெளியிட்ட எவ்லின் மூன்று முறைகள் கிராமி விருதுகளையும் வென்றுள்ளார்.
லண்டனில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் எவ்லின் தனிநபராக தாளவாத்திய இசைக் கச்சேரி செய்து முழு உலகின் கவனத்தையும் தன்வசம் ஈர்த்திருந்தார்.
“அமெரிக்காவின் பிரதிபலிப்பு”
இதேவேளை இவருடன் கூட்டாக இந்த ஆண்டுக்கான போலார் இசை விருதை வென்றுள்ள எமிலோ ஹரிஸ் கிராமி விருதுகளை 13 தடவைகள் பெற்றுள்ளார்.
எவ்லின் க்ளெனி தனது 12ஆவது வயதில் கேள்வித் திறனை இழந்திருந்தாலும் அவருக்கு பரந்துபட்ட அளவில் இசையின் புரிதல் உள்ளது என்றும், எமிலோ ஹாரிஸின் இசை பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்காவின் நிலப்பரப்பை பிரதிபலிக்கிறது என்றும் விருதுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
1992 முதல் இசைக்காக வழங்கப்பட்டு வரும் ‘போலர் இசை விருது’ பாரம்பரிய இசைக்காக மட்டும்மல்லாமல் பல வகைகளில் இசைத்துறையில் கட்டுடைப்புகளைச் செய்தவர்களுக்கும், தனித்துவமான வகையில் சாதனைப் படைத்துள்ளவர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது எதிர்வரும் ஜூன்மாதம் 9ஆம் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அந்நாட்டு அரசரால் வழங்கப்படவுள்ளது.
பிரபல ஸ்வீடிஷ் இசைக் குழுவான அபாவின் மேலாளராக ஸ்டிக் ஆண்டர்சன் போலார் வருடாந்திர இசை விருதை உருவாக்கினார்.