முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில் 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகளை மேற் கொள்வதற்கான கால எல்லை இந்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையுடன் பதிவுகளுக்கான காலம் முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
உதவிகளைப் பெறப் பதிவு செய்பவர்களுக்கு கொழும்பு அரசின் புலனாய்வாளர்கள் எந்த அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை என்பதால் உதவியை எதிர்பார்க்கும் ஏனையோரும் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன்.
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, வர்த்தக, வாணிப, கிராமிய அபிவிருத்தி அமைச்சினால், முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் தமிழ்அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஆரம்ப நடவடிக்கையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராம அபிவிருத்திச் சங்கங்கள் அல்லது மாதர் கிராம அபிவிருத்திச் சங்கள் இயங்காத அல்லது இல்லாத கிராமங்களைச் சேர்ந்தோர், உதவிக்கான விண்ணப்பங்களை தமக்குரிய பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தன பின் கட்டாயமாகக் கிராம சேவையாளரின் பரிந்துரையுடன் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் மீளக் கையளிக்க முடியும்.
விண்ணப்பதாரி ஒருவர் முன்னாள் போராளியா?, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரா? தமிழ் அரசியல் கைதியின் குடும்பமா? என்பதை மாதர் அல்லது கிராம அபிவிருத்திச் சங்கத்தினராலோ, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராலோ உறுதிப்படுத்த முடியவில்லையாயின் அதனைப் படிவத்தில் குறிப்பிட்டு அந்தப் படிவங்களையும் அனுப்பி வைக்க முடியும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனை விட, விண்ணபதாரிகள் தமது விண்ணபத்தின் இடதுபக்க மேல் மூலையில், தமது தொடர்புக்கான தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.