வவுனியாவின் எல்லையோரங்களில் இருந்த சிங்கள மக்களையும் மீள்குடியேற்ற வேண்டும் என கூட்டமைப்பு சார்பு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவினில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-
நாம் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. எல்லா மக்களையும் ஒன்றிணைத்துச் செயற்பட வேண்டும். நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்த மாவட்டத்தின் எல்லையோரங்களில் சிங்கள மக்கள் குடியிருந்தார்கள். அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் புதிய சிங்களக் குடியேற்றங்களையே நாம் எதிர்க்கிறோம்.
இது தவிர,இங்கு நடைபெறும் நிகழ்வில் இனிவரும் காலங்களில் இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, பௌத்த மதங்களினுடைய தலைவர்களையும் கட்டாயம் அழைக்க வேண்டும். எல்லா மதத் தலைவர்களும் இருக்கும் போது அந்த சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும். எனவே அவர்களையும் அழையுங்கள்.- எனத்தெரிவித்துள்ளார்.