கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள்.
விவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன.
இலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கின்றது உடவலயாகம என்ற விவசாயக் கிராமம்.
இங்கு மண்ணையும் மழையையும் நம்பி வாழ்க்கை நடத்துகின்ற 75 வயதான எம். ஜி. தர்மசேன என்ற விவசாயிக்கு 8 பிள்ளைகள்.
எல்லோருக்கும் விவசாயம் தான் வாழ்வாதாரம்.
காட்டை அண்டிய கிராமப்புறம் என்பதால் உடவலயாகம பகுதிக்கு எப்போதும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருக்கின்றது.
காட்டு யானைகள் வயல்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதும் இங்குள்ள விவசாயிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கின்ற பிரச்சனை தான்.
இப்படித்தான் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தர்மசேனவின் மகன்களில் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு பலியானார்.
இப்போது, மூன்று மாதங்களுக்கு முன்னர் மனைவியை இழந்த சோகத்தில் வாடும் தர்மசேனவால் இனிமேலும் விவசாயம் செய்யுமளவுக்கு உடலில் தெம்பு இல்லை.
கடைசி வரை உழுதுண்டு வாழ துணைநின்ற தனது வயல் காணியை யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்பது தான் தர்மசேனவின் கடைசி ஆசை.
ஊரில் தினமும் தான் சென்று ஆறுதல் அடையும் பௌத்த விகாரைக்கு அந்தக் காணியை கொடுத்துவிட்டால் அதனால் பலருக்கு நன்மை கிடைக்கும் என்று முடிவெடுத்தார் அவர்.
அந்த நன்மை சக கிராமத்தவர்களுக்கு மட்டுமன்றி தமது கிராமத்தை அண்டி வாழ்ந்துவரும் காட்டு விலங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் நினைத்தார் இந்த ஏழை விவசாயி.
கடைசியாக தான் அறுவடைசெய்த நெல்மணிகளை காட்டு யானைகளுக்கே தானம் செய்துவிடவும் தர்மசேன முடிவெடுத்தார்.
‘நான் வரும்போது கொண்டுவரவும் இல்லை. போகும்போது கொண்டுபோகப் போவதும் இல்லை. மகனே நாங்கள் இந்த நிலத்தை தானம் கொடுத்துவிடுவோம் என்று அப்பா கூறினார். பிள்ளைகள் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு சம்மதம் வழங்கினோம்’ என்றார் விவசாயி தர்மசேனவின் மகன் விவசாயி உபதிஸ்ஸ.
‘நிலத்தை கொடுத்தால் மட்டும் போதாது.. அதில் கடைசியாக விளைந்த விளைச்சலையும் தானம் கொடுக்க அப்பா நினைத்தார். கிராமங்களை அண்டி வாழும் காட்டு யானைகள் உணவு கிடைக்காமல் சிரமப்படும் யானைகள். அந்த காட்டு யானைகளுக்கு இந்த அறுவடைகளை உணவாகக் கொடுத்துவிட்டு நிலத்தை கிராமத்து விகாரைக்கு கொடுக்க சம்மதித்தோம்’ என்றும் கூறினார் தர்மசேனவின் மகன்.
‘இந்தக் காணியில் பெறுமதியான பெரும் மரங்கள் இருக்கின்றன. மிகவும் பெறுமதி வாய்ந்த காணி தான் அது., இனிமேலும் அதற்கு உரிமை கொண்டாட மாட்டோம் என்று எழுதிக்கொடுத்துவிட்டோம். காட்டு விலங்குகளுக்காக இந்த தானத்தை செய்திருப்பதால் அப்பாவும் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்’ என்றார் உபதிஸ்ஸ.
தர்மசேனவின் எட்டாவது மகனின் மனைவி, மருமகள் நிஷாந்தி ரத்னாகுமாரி, ‘நாங்கள் உண்மையான பெளத்தர்கள். வசதி வாய்ப்புகளோடு இல்லாவிட்டாலும் நாங்கள் எப்போதும் தர்ம தானங்களை செய்பவர்கள். இப்போது எங்களின் மாமாவின் ஆசையை நிறைவேற்றுவது தான் எங்களின் விருப்பமும் கூட. நாங்கள் செய்யும் தர்ம தானங்கள் தான் எங்களுக்கு எப்போதும் துணைவரும் என்றுதான் மாமா எப்போதும் கூறுவார்’ என்றார்.
நிலையான நீர்ப்பாசனம் இல்லாமல், மழை நீரையே பெரும்பாலும் நம்பியிருக்கின்றனர் உடவலயாகம விவசாயிகள்.