நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்னும் நட்ராஜ், தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர் ‘மிளகா’, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். பாலிவுட்டில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார்.
புலி படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்வது தமிழில் இரண்டாவது படமாகும். இதற்கு முன் விஜய் நடிப்பில் பதிமூன்று வருடங்களுக்கு முன் வெளியான ‘யூத்’ படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இவர் புலி படத்தை பற்றி கூறும்போது, நான் புலி படத்தின் எந்த விஷயத்தையும் சொல்லக் கூடாத கட்டாயத்தில் இருக்கிறேன். தயாரிப்பாளரும், இயக்குனரும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் படத்தைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வேன்.
ஆனால் நிச்சயம் இப்படம் ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாகவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும் என்றும், எனக்கு இப்படத்தில் ஒளிப்பதிவு வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றியும் கூறினார்.
சிம்புதேவன் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் சுருதிஹாசன் நடிக்கிறார்கள். ஸ்ரீதேவி மற்றும் சுதிப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படம் விஜய் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.