கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான் என்று சுருதிஹாசன் கூறினார். இது குறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
இசைப்பணிக்கும் எழுதுவதற்கும் வயதோடு சம்பந்தம் இல்லை. எந்த வயதிலும் எழுதலாம். பாடலாம், இசையமைக்கலாம். ஆனால் நடிப்புப் அப்படி அல்ல.
கதாநாயகியாக இருப்பது கொஞ்ச காலம்தான். நீண்ட நாள் கதாநாயகியாக நீடிக்க முடியாது. இதில் நடிகர்கள் விதி விலக்காக இருக்கிறார்கள். அவர்களால் நீண்டநாள் கதாநாயகனாக நடிக்க முடியும். நடிகைகளுக்கு அப்படி வாய்ப்புகள் அமையாது. இதையெல்லாம் நான் உணர்ந்து இருக்கிறேன்.
எனவே இப்போதைக்கு நடிப்பதில் தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
கதாநாயகி வேடத்துக்கு கூட நிறைய பேரை சார்ந்துதான் இருக்க வேண்டி உள்ளது. மேக்கப்மேன், உடை அலங்கார நிபுணர் உள்ளிட்டோர் நாயகியை அழகுபடுத்துகிறார்கள். டைரக்டர் நடிப்பு சொல்லி கொடுக்கிறார். கேமராமேன் அழகாக திரையில் கொண்டு வருகிறார்.
ரசிகர்கள் கதாநாயகி அழகாக இருந்தார் என்று சொல்லி விட்டு போய் விடுகிறார்கள். ஆனால் நாயகியை அழகுபடுத்த திரைக்கு பின்னால் நிறைய பேர் வேலை செய்கிறார்கள். அவர்களின் உழைப்புதான் கதாநாயகியை மெருகேற்றி காட்டுகிறது.
ஆனால் எழுதுவதற்கு இவர்களெல்லாம் வேண்டாம். பேப்பரும் பேனாவும், மூளையும் இருந்தால் போதும் எழுதிவிடலாம். இசை ஆர்வம் இருந்தால் டியூன் போட்டு பாடலும் எழுதிவிடலாம். ஐம்பது வயதில் கூட எழுதலாம்.
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.