பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்றது.
மன்னார் மாதர் அமைப்புடன் இணைந்து பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இதில் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் நல்லையா குமரகுருபரனும் கலந்துகொண்டார்.
‘விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுதலை செய்யுங்கள்’, ‘விபூசிகாவின் தாயார் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணத்தை இதுவரைக்கும் அரசு ஏன் வெளியிடவில்லை?’, ‘குற்றம் செய்யாதவரை கைதுசெய்துவைத்திருப்பதா நல்லாட்சி?’, ‘தாய், தந்தை, உறவினர்களை இழந்து தனியாக வாழும் சிறுமி விபூசிகாவைப் பாதுக்காப்பதற்கு எவரும் இல்லையா?’, ‘இதுவா இந்த நாட்டின் சிறுவர் சட்டம்?’, ‘யுத்தம் நிறைவடைந்தாலும் மக்களின் மனங்களில் இருந்து யுத்தவடுக்கள் இன்னும் மாறவில்லை!’, ‘ஜெயக்குமாரி போன்று கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் அநாதைகளாகக் காணப்படுகின்றனரே!’ என்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
இறுதிப் போரின்போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயக்குமாரியின் மகன் இராணுவத்துடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் பத்திரிகைகளில் பிரசுரமாகின. இதை பல்வேறு தரப்பினரிடமும் சர்வதேசத்திடமும் தெளிவுபடுத்தியும்கூட இதுவரைக்கும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இவையனைத்துக்கும் இந்த நல்லாட்சியில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன் காரணமற்று கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரி உட்பட அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, ஜெயக்குமாரி தொடர்பாக வழக்கு விசாரணை இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நடைபெற்றது. எனினும், இந்த வழக்கு விசாரணைக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸார், “நேற்று வியாழக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நீதிமன்றத்திடம் இருந்து சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சரியான தகவல் கிடைக்காத காரணத்தால் அவரை முற்படுத்த முடியாமல் போய்விட்டது” – என்று கூறினர்.
எவ்வாறாயினும் இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரை முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.