‘பீட்சா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கி திரையுலகில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்திய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ்.
இவர் மற்றும் இவரது நண்பர்கள் ஒன்றாக இணைந்து சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித்திறமைகள் மிளிர நடிக்கவேண்டும் என்று தாகமுள்ள நடிகர்கள் ஆகியோருக்கு துணைக்கரம் நீட்டும் வகையில், பொழுதுபோக்குத் துறையில் ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தடம்பதித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் முதல் குறும்படங்களின் தொகுப்பு ‘பென்ச் டாக்கீஸ் – தி பஸ்ட் பென்ச்’ இன்று வெளிவரவிருக்கிறது.
அனில் கிருஷ்ணன், சாருகேஷ் சேகர், கோப்பகுமார், மோனேஷ், ரத்னகுமார் ஆர்.எம்., மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் என்ற ஆறு குறும்பட இயக்குனர்களால் ஆறு குறும்படங்கள் இயக்கப்பட்டு ஒரே படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு தணிக்கை சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படங்கள் இன்று கோயமுத்தூரில் எஸ்.பி.ஐ., சினிமாஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் திரையரங்குகளிலும், பெங்களூரு பி.வி.ஆர். சினிமாஸில் மார்ச் 13-ந் தேதியிலும் வெளியிடப்படுகின்றன.
கலைத்துறையில் சாதனை முத்திரை பதிக்கவும் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தவும் ‘பென்ச் டாக்கீஸ்’ நிறுவனம் முனைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறும்பட இயக்குனர்களுக்கு தனித்துவ அடையாளத்தை இது ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.