றகர் வீரர் வசீமின் மரணம் விபத்தல்லவாம்! மஹிந்த மகனே பின்னணி ??

கொழும்பு, நாரஹன்பிட்டி பகுதியில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ragger-vaseemee

கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2012 மே 17 ஆம் திகதி நாரஹன்பிட்டியில் இடம்பெற்ற றகர் வீரர் வசீம் தாஜூதீன் என்பவரின் மரணம் தொடர்பில் நாரஹன்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பித்தது.

இதில் இரண்டு விஞ்ஞானபூர்வ சாட்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. முதலாவது பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியரின் அறிக்கை. இரண்டாவது இரசாயன பகுப்பாய்வாளர்களின் அறிக்கை. இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் அரச இரசாயண பகுப்பாய்வு அதிகாரியின் கருத்து எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

அது தொடர்பான அறிக்கை 2015 பெப்ரவரி 12 ஆம் திகதியே கிடைத்தது. இரசாயன பகுப்பாய்வாளர் சம்பவம் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாது என அறிவித்துள்ளார்.

ஆனால், மற்றைய அறிக்கையில் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

விசேடமாக உயிரிழந்த நபரின் உடலில் காபன் மொனொக்சைட் வாயு சேர்ந்திருப்பது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரியவருகிறது. அதனால் இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் அல்ல என்பது சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதியாகிறது.

அதனால் இந்த மரணம் குறித்து விசாரணையை நாரஹன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து அகற்றி நேற்று (நேற்றுமுன்தினம்) தொடக்கம் குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
அதன்படி குற்றத் தடுப்புப் பிரிவினர் பூரண விசாரணை நடத்துவர்” – என்றார்.

றகர் வீரர் வசீம் தாஜூதீன் மரணத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முன்னர் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts