யாழில் நெல் கொள்வனவு சனிக்கிழமை ஆரம்பம்

யாழ்.மாவட்டத்தில் 2014 – 2015ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கையில் செய்கை பண்ணப்பட்ட நெல், கூட்டுறவுச் சங்கம், நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றினால் எதிர்வரும் சனிக்கிழமை (28) முதல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நெல் சந்தைப்படுத்தும் சபையால் சாவகச்சேரி பகுதியிலும், கூட்டுறவுச் சங்கத்தால் பண்டத்தரிப்பு, உடுப்பிட்டி, கொடிகாமம், நீர்வேலி, மானிப்பாய், அச்சுவேலி மற்றும் ஏனைய பகுதிகளிலும் நெல் கொள்வனவு செய்யப்படும்.

இதன்படி கீரி சம்பா மற்றும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 50 ரூபாய்க்கும், நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 45 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது. நெல்லின் ஈரப்பதம் உயர்ந்தபட்சமாக 14 வீதமாக இருக்கவேண்டும் என உணவுப் பாதுகாப்பு அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் கமநல சேவைகள் பிராந்திய உத்தியோகத்தர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமுள்ள விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி அவர்களின் அத்தாட்சியுடன் சாவகச்சேரியிலுள்ள கமநல திணைக்களத்தின் களஞ்சியசாலையில் தமது நெல்லை விற்பனை செய்ய முடியும்.

கூட்டுறவு சங்கங்களின் ஊடாக நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் பொது முகாமையாளர் அல்லது தலைவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்த வருடம் ஒரு விவசாயிகளிடம் இருந்து தலா 2000 கிலோகிராம் நெல்லை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. யாழ்.மாவட்டத்தின் நெல் கொள்வனவுக்காக 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Posts