எலிப்பாஷணங்களை வைத்து ‘குழந்தைகளை கொல்ல வேண்டாம்’

வீடுகளிலுள்ள எலிகளைக் கொல்வதற்காக இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய தரமற்ற எலிப்பாஷணங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசநோய்ப் பிரிவின் தலைவரும் இயல்பியல் நோய் நிபுணருமான வருண குணதிலக்க, இவ்வாறான எலிப்பாசனங்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

விதவிதமான நிறங்களில் தயாரிக்கப்படும் இந்த எலிப்பாசனங்களை வீட்டின் பல்வேறு பகுதிகளில் வைப்பதால், அவை குறித்த அறிவற்ற சிறுவர்கள் அவற்றை உட்கொண்டுவிடுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இவ்வாறான எலிப்பாஷணங்கள் அடங்கிய பைக்கட்டுகளில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதிகள் குறிப்பிடப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நச்சுப்பொருட்களால் ஒரு வயது முதல் மூன்று வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களே பெருமளவில் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான வர்ணங்களை இதுபோன்ற நச்சுப்பொருட்களுக்கு இடுவது உலக சுகாதார மையத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Related Posts