Ad Widget

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து ஆலயத்துக்கு வருவதற்காக இதுவரையில் 6,200 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே, இதனை கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

‘கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா 28ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மறுநாள் மார்ச் மாதம் முதலாம் திகதி காலை 7 மணிக்கு பெருவிழாவாக நடைபெறும். இந்த திருவிழாவில் பங்குகொள்வதற்காக இந்தியாவிலிருந்து 4,200 பேரும் இலங்கையிலிருந்து 2,000 பேரும் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 28ஆம் திகதி அதிகாலை 4 மணியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதிகாலை 5 மணியிலிருந்து தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கப்படும். இதற்கான கட்டணம் 72 ரூபாய் அறவிடப்படும். படகுசேவையில் ஒரு வழிப்பயணத்துக்கு 225 ரூபாய் அறவிடப்படும். இந்த படகுசேவை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும்.

கச்சதீவு திருவிழா நடைபெறும் தினத்தில் 150 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள். அம்பியூலன்ஸ் சேவையும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

28ஆம் திகதி இரவு உணவும் மார்ச் முதலாம் திகதி காலை உணவும் கடற்படையினரால் வழங்குவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆலயத்துக்கு செல்பவர்கள் ஆலய சூழலை சுகாதாரமாக பேணுவதுடன், பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையை தடைசெய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts