முதல் பல்கலைக்கழகக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பம்

இலங்கையில் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி அமைச்சின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழகக் கல்லூரியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

விரைவில் அது திறந்து வைக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி ஜே. ஜூட் வோல்ட்டன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமுர்த்தியிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாகவும் சமுர்த்தி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசமானிய அடிப்படையில் குறைக் கப்பட்ட கட்டண அறவீட்டுடனும் இந்தக்கற்கை நெறிகள் ஆரம்பமாகவுள்ளன.

8 பாடப் பகுதிகளைக் கொண்ட இந்தக் கற்கை நெறிகள் அனைத்தும் ஆங்கில மொழி மூலமாகவே இடம் பெறவுள்ளன. இலங்கையில் யாழ்ப்பாணம், மாத்தறை, குளியாப்பிட்டிய, அநுராதபுரம், ரத்மலானை ஆகிய 5 இடங்களில் இந்தக் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தொழில்நுட்பம் வாழ்க்கைத் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தின் கீழ் இந்தப் பல்கலைகக்கழகக் கல்லூரிகள் உயர்கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக ஜி.சி.ஈ உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மேலதிக கல்விக்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல், தேசிய தொழிற்திறன் தகைமைகள் மட்டம் 4 இனைக் கொண்டிருப்பவர்களுக்குரிய மேலதிக கல்விக்கான சந்தர்ப்பத்தை விரிவு படுத்தல் மூலம் தொழிற்துறைக்குத் தேவையான மேலதிக நடுத்தரமட்ட தொழில் நுட்பவியலாளர்களை உருவாக்க முடியும்.

இந்தக் கலாசாலையில் உணவு வகைத் தயாரிப்புத் தொழில்நுட்பம், கட்டட சேவைத் தொழில்நுட்பம், விவசாயத்துறைத் தொழில்நுட்பம், விருந்தோம்பல் முகாமைத்துவம், நவீன இயந்திரசாதனத் தொழில்நுட்பம், கட்டட நிர்மாண தொழில் நுட்பம், தயாரிப்பு வரைபுத் தொழில்நுட்பம், அழகு ஒப்பனைக்கலை ஆகிய கற்கைநெறிகள் இடம் பெறவுள்ளன.

சமுர்த்தியில் உள்ளவர்களுக்குப் பதிவுக்கட்டணமாக 250 ரூபாமாத்திரமே அறவிடப்படும். சமுர்த்தி இல்லாதவர்களுக்கு முன்னர் 3 லட்சத்து 7 ஆயிரத்து 100 ரூபா அறவிடப்பட்டது. அரச மானிய அடிப்படையில் பின்னர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவாகக் குறைக்கப்பட்டது.

அதன் பின்னர் அது மேலும் குறைக்கப்பட்டுத் தற்போது 60 ஆயிரம் ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கற்கைநெறிக்கு 30 மாணவர்களே அனுமதிக்கப்படுவர். இரண்டரை வருடங்கள் கற்கைநெறியும் இறுதி 6 மாதங்கள் பயிற்சியுமாக 3 வருடங்களைக் கொண்ட இந்தப் பயிற்சிநெறிக்கு 29 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். என்று ஜூட் வோல்ட்டன் மேலும் தெரிவித்தார்.

Related Posts