ஐ.நா சபையின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரி பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளவுள்ள மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா சபையில் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்தநிலையில் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
எனவே விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து இன்றையதினம் போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதுடன் மகஜர் ஒன்றினையும்வழங்கவுள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அறிவிப்புத் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரனின் நீர்வேலியில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது . அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசு ஐ.நா விசாரணையை காலதாமதப்படுத்துமாறு கேட்ட போது அதற்கு ஒப்புக் கொண்டு ஐ.நா ஆணையாளரும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு விசாரணை பிற்போடுவதாக கூறியுள்ளார்.
இதனை எதிர்த்தும் விசாரணையை வெளியிட கோரியும் பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இந்தபேரணியானது சாதாரண விடயம் அல்ல. மாறான ஐ.நா ஆணையாளருக்கும் இலங்கையில் இருக்கக் கூடிய அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இந்த ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ் மக்களின் மன உணர்வு என்ன என்பதை தெளிவு படுத்துவதே நோக்கம்.
எனவே தமிழ் மக்கள் தங்களுடைய ஏனைய கடமைகளை ஒதுக்கி வைத்து இந்தப் பேரணியில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் நாங்கள் மௌனமாக இருந்தால் அவர்கள் செய்வது அனைத்தையும் சரியாக்கி விடும் எனவே எங்களது உணர்வுகளைத் தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.