சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான முறையில் பேரணியில் ஒன்று திரளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் யாழ். மாவட்ட தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

sugirthan-tna

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அவர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவருடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 10 மணிக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் இணைந்து ஜெனீவா பிரேரணை பிற்போடப்பட்டத்தை கண்டித்தும் குறிப்பிட்ட திகதியில் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேற்கொள்ளவிருக்கும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்பெற செய்ய இளைஞர்களே ஒன்றாக இணையுங்கள்.

எமது தமிழ் மக்களின் குறிகாட்டியாக யாழ். பல்கலைகழக சமூகம் இருக்கின்றது. இவர்கள் காலத்துக்கு காலம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்கள். உண்மையில் இன்று சர்வதேசம் எங்களை திரும்பி பார்கின்றார்கள் என்றால், அது பல்கலைகழக மாணவர்களால் மேற்கொள்ளபட்ட மிக பிரமாண்டமான பொங்கு தமிழ் நிகழ்வின் மூலமே என்பதை எவரும் மறந்து விட முடியாது.

ஆனால் ஆயுத போராட்டம் மௌனித்த பின்னர் பல்கலைகழக சமூகம் பல்வேறு வகையில் அடக்கி ஒடுக்கப்பட்டர்கள். திட்டமிட்டு கைது செய்யப்பட்டர்கள். இதனால் மாணவ சமுதாயம் தமது இன உணர்வுகளை அடக்கி வாழ்ந்து வந்தார்கள்.

சர்வதேசம் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வினை தருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று சர்வதேசமும் பின்னடிகின்ற நிலையில் மீண்டும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளர்கள். சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான முறையில் பேரணி ஒன்றை எதிர்வரும் செவ்வாய்கிழமை (24) காலை 10 மணிக்கு பல்கலை கழக வளாகத்தில் இருந்து நல்லூர் வரை நடாத்த திட்டமிட்டுள்ளார்கள். எனவே பல்கலைகழக மாணவர்களின் கைகளை பலப்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts