உலக கிண்ண போட்டியின் 5வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது துடுப்பாட்டத்தை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக கெய்ல் மற்றும் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் அவர்களால் நீடித்து விளையாட முடியவில்லை. கெய்ல் 36 ஓட்டங்களிலும் ஸ்மித் 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களம் இறங்கிய வீரர்களும் அயர்லாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
87 ஓட்டங்களில் அந்த அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ் மற்றும் சமி ஆட்டத்தின் போக்கை மனதில் வைத்து சிறப்பாக விளையாடினார்கள். இவர்களது ஜோடி 154 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த பெரிதும் உதவியது. 9 பவுண்டரி, 4 சிக்சர் உடன் சமி 89 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி நிமிடங்களில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த சிம்மன்ஸ் 102 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததார்.
இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து, 305 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது.
அயர்லாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போல் ஸ்டிர்லிங் 9 பவுண்டரி, 3 சிக்சர் உடன் 92 ஓட்டங்களையும் எட் ஜொய்சி 10 பவுண்டரி, 2 சிக்சர் உடன் 84 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழியமைத்தனர்.
இறுதியில் அயர்லாந்து அணி 45.5 ஓவர்களி நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக போல் ஸ்டிர்லிங் தெரிவு செய்யப்பட்டார்