அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களையும் பதிவு செய்யும்படி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தமிழ் கைதிகளினதும் விவரங்களை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர் ஒன்றியம் கேட்டுக் கொள்கின்றது.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலை வீச்சினை விரைவுபடுத்தும் பொருட்டு கைதிகளின் பெற்றோர், உறவினர் மூலம் சரியான, முழுமையான தகவல்களைத் திரட்டி வருகின்றோம்.
அதற்கு ஏற்ப வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் அதற்குரிய விவரப் படிவம் பெற்றுக் கொள்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாணம் கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றியத்தின் செயலாளர் (077 183 8541) உடன் தொடர்பு கொண்டு படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு ஒன்றியம் கேட்டுக் கொள்கின்றது.
மேலதிக விவரங்களை செயலாளர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். தமது சமூகத்திற்காக குரல் உயர்த்தி நீண்ட நெடுஞ்சிறை வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் வாழ்வின் விடிவினை ஏற்படுத்துவதற்கு ‘ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் – நம் உறவுகளை மீட்போம்’ எனும் கோட்பாட்டுடன் செயற்படுவதே இந்த அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் ஒன்றியத்தின் குறிக்கோளாகும்.
இது தவிர எவ்வித அரசியல் நோக்கமோ அல்லது வேறு எந்தத் தரப்பினரின் தூண்டுதலோ, நிதி மற்றும் பொருளாதார கையாள்கையோ எமது செயற்பாட்டுக்குக் காரணம் அல்ல என்பதைப் பொறுப்புடன் பதிவு செய்கிறோம்.
மேலும் எமது மனிதாபிமான, ஜனநாயக செயற்பாட்டை அரசாங்கத்துக்கு எதிரானது என்று தவறாக கற்பிதம் செய்து கொண்டு யாரும் இடையூறு செய்யவோ, அச்சுறுத்தவோ கூடாது என்பது எமது தாழ்மையான வேண்டுகோளாகும்.
எமது மனித நேய நடவடிக்கைக்கு மாவட்ட ரீதியிலான சிவில் சமூகம் மற்றும் பிரஜைகள் குழு ஆகியோரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்கிறோம் – என்றுள்ளது.