கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை அமோக விளைச்சலைப் பெற்றுள்ள நிலையில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (06.02.2015) அறுவடை விழா நடைபெற்றுள்ளது.
மத்திய கல்வி அமைச்சால் விவசாய வளாகப் பாடசாலை என அங்கீகாரம் பெற்ற உருத்திரபுரம் மகா வித்தியாலயம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 3 ஏக்கர் பரப்பளவில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பாடசாலையின் சகல தரப்பினரும் கூட்டிணைந்து மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானம் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஊடாகப் பாடசாலையின் அபிவிருத்திக்குச் செலவிடப்படுகிறது.
உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தின் முன்மாதிரியான இவ்விவசாய நடவடிக்கைகளைப் பாராட்டும் விதமாகவும் மேலும் ஊக்குவிக்கும் முகமாகவும் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நெல் அறுவடை விழாவில் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர் திருமதி.மீனலோஜினி சிவதாஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.கணேசலிங்கம், விவசாய ஆசிரிய ஆலோசகர் சி.இளங்குமார், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.ஜெனார்த்தனன் ஆகியோருடன் ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாகத்துடன் பங்கேற்று இருந்தார்கள்.