காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனீயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் அரசு மற்றும் அரச ஒட்டுக்குழுக்களினால் கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அண்மைக்காலங்களில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று அமைதிப் பேரணியாக வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ். மாவட்டசெயலகத்தில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்படுமென வடக்கு கிழக்கு மாகாண காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மகாண சபை மற்றும் நகர பிரதேச சபை உறுப்பினர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர்கள், புத்திஜீவிகள், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக பெருமக்கள். சமூகத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மதத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுசன அபிமானமுள்ள சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்களென திரண்டு குரல் கொடுக்க வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாண காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்பு மிக நேசமுடன் அழைப்பு விடுத்துள்ளது.