மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு

பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் சி.பரந்தாமன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2015ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி மாதத்திலிருந்து இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

மாற்றுவலுவுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் இதற்குரிய விண்ணப்படிவத்தை தமது கிராம அலுவலகரிடம் பெற்று, பூரணப்படுத்தி பாடசாலை அதிபரின் சிபாரிசுடன் கிராம அலுவலகரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கிராம அலுவலகர் சிபாரிசு செய்து பிரதேச செயலக பிரிவு சமூக சேவைகள் அதிகாரியிடம் ஒப்படைப்பார்.

மாதத்தில் 15 நாட்களுக்கு பாடசாலைக்கு சமூகமளித்த மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.

இதற்காக ஒவ்வொரு மாதமும் மாற்றுவலுவுள்ள மாணவர்களின் வரவு பாடசாலை அதிபர் ஊடாக உறுதிப்படுத்தப்படும்.

கொடுப்பனவைப் பெற்ற மாணவர் பாடசாலை கல்வியை இடைநிறுத்தினால் அல்லது வேறொரு பிரதேச செயலக பிரிவுக்கு இடம்மாறினால் கொடுப்பனவு நிறுத்தப்படும் என அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts