Ad Widget

யாழ் மாவட்டத்தில் முதற்தடவையாக சேதன விவசாயச் சான்றிதழ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சேதன விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முதற்தடவையாக சேதன விவசாயச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.2015) கரந்தன் இராமு வித்தியாலயத்தில் சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சேதன விவசாயச் சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செறிவு வேளாண்மையில் அதிக அளவுக்கு செயற்கை உரங்களும் பீடைகொல்லி நஞ்சுகளும் களைநாசினிகளும் பயன்படுத்தப்படு கிறது. இந்த விவசாய இரசாயனங்கள் உணவின் மூலம் மனிதர்களின் உடலைச் சென்றடைந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருவதோடு நிலத்தடி நீரையும் நஞ்சாக்கி வருகிறது. இதனால், வடமாகாண விவசாய அமைச்சு இயற்கையோடு இயைந்த சேதன விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு சேதன விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவித்தும் வருகிறது.

இதற்கு ஏதுவாக சொண்ட் நிறுவனம் சேதன விவசாயம் தொடர்பாக விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கி வருகிறது. இவ்வாறு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் பயிற்சி பெற்று வாழைச் செய்கையில் சேதன முறையில் ஈடுபட்ட 61 விவசாயிகளுக்கே சேதன விவசாயச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சேதன முறை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு வகைகள் நஞ்சற்றவை என்பதால் அவை கூடுதலான சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளன. எனினும், செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தாது செய்யப்பட்ட உற்பத்திதான் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய சான்றிதழ்கள் இல்லாமையால் சேதன விவசாயிகளிடம் இருந்து உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதில் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. சேதன விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கி வந்த இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே சேதன விவசாயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இச்சான்றிதழ் பெற்ற வாழைச் செய்கையாளர்களிடம் இருந்து உற்பத்திகளைக் கொள்வனவு செய்யத் தற்போது கீல்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொண்ட் நிறுவனப் பணிப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த சேதன விவசாய நிபுணர் பேராசிரியர் ரிச்சார்ட் துரொங்ரன் மற்றும் இலங்கை சேதன விவசாய அத்தாட்சிப்படுத்தும் நிறுவகத்தின் நிறைவேற்று இயக்குனர் திலக் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

2

9

6

Related Posts