உங்களுக்கு இங்கேயே காணி தர நடவடிக்கை எடுகிறோம். எவராவது காணி தருவதாக கூறி அழைத்து செல்ல முற்பட்டால் உடன் எமக்கு அறிவியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தின் மக்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்த போது அம் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றி குறித்த காணியை வேறு திட்டங்களுக்காக சிலர் பயன்படுத்தவுள்ளதாக முதலமைச்சருக்கு தெரியப்படுத்திய நிலையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சிதம்பரபுரம் நிலன்புரி நிலையம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்ணைப்புக் குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டது எனினும் அரசாங்க அதிபர் இதுவரை செய்யவில்லை என முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
இந் நிலையில் கருத்து வெளியிட்ட வட மாகாண சுகாதார அமைச்சர் அரசாங்க அதிபருக்கு 3 தடவைகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடை முறைப்படுத்துமாறு ஞாபகமூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும் மக்களுக்கு காணி வழங்குவதை செயற்படுத்தவில்லை.
இங்குள்ள மக்கள் இங்கேயே வசிக்கவும் விரும்புகின்றனர். இவர்களின் இரண்டாவது தலைமுறையும் இங்கு வந்துள்ளது. அத்துடன் இவர்களுக்கான தொழில் வாய்பபுகளும் இங்கேயே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இங்கிருந்த வேறு இடத்திற்கு செல்ல முடியாது. இந்த காணிகளை இங்குள்ள மக்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. போதுமான காணி காணப்படுகின்றது. அரை ஏக்கர் வீதம் ஒரு குடும்பத்திற்கு வழங்க முடியும் என முதலமைச்சருக்கு அவ்விடத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் முகாம் பற்றியும் அம் மக்கள் அவ் இடத்திலேயே குடியமர்த்தப்பட வேண்டிய தேவை பற்றியும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதன் போது முகாமில் உள்ளவர்கள் தாம் படும் இன்னல்கைள முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க தெரிவித்தனர். இவற்றை செவிமடுத்த முதலமைச்சர் இவ் விடயம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை ஒருங்கணைப்பு குழு கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவோம் என அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் தெரிவித்திருந்ததுடன் அங்கிருந்த மக்களிடம் இவ் விடயத்தை நானாக செய்ய முடியுமாக இருந்தால் நான் செய்துவிடுவேன். அதனால் நாங்கள் தருவதாக கூறவில்லை. பார்க்கின்றோம் என்றே கூறியுள்ளோம். எனினும் இந்த முறை உரிய நடவடிக்கை எடுப்போம். நீங்கள் தொடர்ந்தும் இங்கேயே இருப்பதற்கு பாருங்கள். அதற்கான நடவடிக்கையை நாம் எடுப்போம். நீங்கள் வேறு இடங்களில் காணி தருவதாக கூறி யாராவது அழைத்து செல்ல முற்பட்டால் எங்கும் செல்லாதீர்கள். உடனே எமக்கு அறிவியுங்கள். வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் உடன் அறிவியுங்கள். நாங்கள் தற்போது மத்திய அரசுடன் இவ்விடயம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றோம் எனவே விரைவில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.