அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் கடல்வழியாகச்சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்துவைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருக்கிறது.
சென்ற ஆண்டு இந்த அகதித்தஞ்சக் கோரிகளை சுமார் ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.
சிறு குழந்தைகள் உட்பட 157 பேரையும் நாட்கணக்கில் நடுக்கடலில் பலவந்தமாக தடுத்து வைத்ததன் மூலம் ஆஸ்திரேலிய அரசு அகதிகளை நடத்துவதற்கான தனது சர்வதேச கடப்பாடுகளை மீறிவிட்டதாக ஐ.நா உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்திருந்தன.
ஆனால் தனது இந்த செயலை நியாயப்படுத்தியிருந்த அவுஸ்திரேலிய அரசு, அவுஸ்திரேலிய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே தான் நடந்துகொண்டதாக தெரிவித்து வந்தது.
தற்போது பசுபிக் தீவான நவுருவில் தற்போது தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும், அந்த படகில் வந்த 157 இலங்கையர்களில் ஒருவரால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்திருக்கும் அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றம், அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியே என்று தெரிவித்துள்ளது.
நேற்றய தீர்ப்பு தனது நடவடிக்கைகளுக்கு கிடைத்த நீதிமன்ற அங்கீகாரமாக ஆஸ்திரேலிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுருந்தாலும், தீர்ப்பு அகதிகள் மற்றும் அகதித்தஞ்சம் கோருபவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு இது பின்னடைவாக அமையும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.
நேற்றய தீர்ப்பு கொடுத்த நான்கு நீதிபதிகளில் மூவர் இணைந்து இந்த தீர்ப்பை அளித்திருக்கின்றனர். ஒரு நீதிபதி இவர்களுக்கு மாற்றுக்கருத்தை பதிவு செய்திருக்கிறார். எனவே இந்த தீர்ப்பின் முழுமையையும் படித்தால் மட்டுமே இதன் முழுமையான சாதகபாதகங்களை விரிவாக புரிந்துகொள்ள முடியும் என்று சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.