தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் பழிவாங்கள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார்.
தனது தங்காலை – கால்ட்டன் இல்லத்தில் இருந்தவாறு தன் மீதான குற்றச் சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு போதும் இல்லாதவாறு தனக்கும் தனது மனைவி, பிள்ளைகளுக்கும் எதிராகவும் மிக மோசமக சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவித அடிப்படையும் அற்ற நிலையில் ஊடகங்கள், இணையம் மற்றும் சமூக இணையத்தளங்கள் ஊடாகவும் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போதும், அதன் பின்னரும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எனது அரசாங்கத்துக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. எவருக்கேனும் எதிராக அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முறைமைகள் உள்ளன. முன்னெப்போதும் இல்லாத இந்த திட்டமிட்ட சேறு பூசும் நடவடிக்கை தொடர்பில் மக்களுக்கு பதிலளிக்க விரும்புகின்றேன்.
ஜனவரி 9 ஆம் திகதி அதிகாலை இராணுவ சதித் திட்டம் ஒன்றின் ஊடாக ஆட்சியில் தொடர்ந்தும் நான் இருக்க முற்பட்டதாக எனக்கு எதிராக குற்றச் சாட்டு ஒன்று உள்ளது. எனினும் உண்மையில் அன்றைய தினம், ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிட்டு முடிக்க பல மணி நேரங்களுக்கு முன்னரேயே நான் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து அவருடன் கலந்துரையாடிவிட்டு அலரி மாளிகையில் இருந்து வெளியேறினேன். இந் நிலையில் சட்ட மா அதிபரை அழைத்து நான் அதிகாரத்தில் தொடர முடியுமான சட்ட ஆலோசனைகளை கோரியதாக முன் வைக்கப்படும் குற்றச் சாட்டு மிகக் கொடூர சிந்தனை கொண்டவர்களின் பழி சுமத்தும் நடவடிக்கை என்பது அவதானிப்போருக்கு விளங்கக் கூடியதே. இதனை விட இது விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் செய்த உரை என்னை வெகுவாக கவலைக் கொள்ளச் செய்தது. பதவியில் இருந்து இளைப்பாறிய போதும் எனக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய சூழல் ஒன்று இல்லை.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அலரி மாளிகையின் படங்களை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டு நானும் எனது குடும்பத்தினரும் பொது மக்களின் பணத்தில் அதி சொகுசாக வாழ்ந்ததாக மக்களை நம்ப வைக்க முற்படுகின்றனர். மலசல கூடம், குளிரூட்டப்பட்ட படுக்கையறை மற்றும் தொலைக்காட்சி வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓய்வறை இதில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருக்கும். இது 2013 ஆம் ஆண்டு பொது நலவாய மாநாடு தொடர்பில் அமைக்கப்பட்டதாகும். சர்வதேச தரத்துக்கு அமைவாக புதுப்பிக்கப்பட்டதாகும் என்பதை நான் மக்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன். இங்கு அம்மாநாட்டுக்கு வருகை தந்த அரச தலைவர்களுக்கான கண்காட்சியொன்றும் விருந்துபசார நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
அத்துடன் எனது அரசாங்கம் மேற்கொண்ட நாசம், ஊழல் மற்றும் மோசடிகளை தேடுவதாக கூறிக்கொண்டு ஒரு குழு பொலிஸாருடனும் பொலிஸார் இல்லாமலும் பல்வேறு இடங்களை சுற்றிவளைத்து வருகின்றனர். இவர்கள் எனது உருவம் பொறித்த பிளாஸ்டிக் சுவர் கடிகாரங்கள், சால்வை அடையாளம் உள்ள தேநீர் கோப்பைகள், ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளைக் கைப்பற்றி அதனூடாக நானும் எனது அரசாங்கமும் ஊழல் செய்ததாக பிரசாரம் செய்கின்றனர். எனினும் இவ்வாறான பொருட்கள் எந்தவொரு நபரிடமும் இருப்பது சட்ட ரீதியாக குற்றமில்லை என்பதை யாவரும் அறிந்ததே.
இந் நிலையில் எனது மனைவி திறைசேரியில் இருந்து 100 கிலோ தங்கத்தினை விற்பனை செய்ய முற்பட்டதாக குற்றச் சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் பதிலளித்துள்ள நிலையில் நான் மேலதிகமாக எதனையும் கூற விரும்பவில்லை. திறைசேரியில் உள்ள தங்கத்தினை ஜனாதிபதியின் மனைவி மட்டுமன்றி திறைசேரி செயலாளரால் கூட விற்பனை செய்ய முடியாது என்பதை மட்டும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
எனது மகன்மாருக்கு சொந்தமான லம்போகினிகார்கள் உள்ளதாக கூறிக்கொண்டு பந்தயக் கார்கள் உள்ள வீடுகளையும் அதன் உருவத்தை ஒத்த முகங்களைக் கொண்ட கார்கள் உள்ள இடங்களையும் பொலிஸார் சுற்றி வளைக்கும் நிலைமை ஒன்று கடந்த நாட்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது. எனினும் இதுவரை எந்தவொரு லம்போகினி காரும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடலில் தரையிறக்க முடியுமான விமானம் ஒன்றை தேடி வீரகெட்டியவில் எனக்கு சொந்தமான இடம் ஒன்று பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அத்துடன் அலரி மாளிகையில் திருடப்பட்ட பொருட்கள் என சந்தேகித்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் சொந்தமான பொருட்கள் அடங்கிய இரு கொள்கலன்கள் பொலிஸாரின் சோதனைக்கு உள்ளானது. நான் எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த எனது பொருட்களையே அதில் வைத்திருந்தேன். எனக்கு கொழும்பில் ஒரு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்று இல்லாத நிலையிலேயே அவ்வாறு கொள்கலனில் நான் வைத்திருந்தேன். முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படக் கூடிய உத்தியோகபூர்வ இல்லம் எனக்கு கிடைக்கும் வரை அந்த பொருட்கள் அந்த கொள்கலன்களிலேயே இருக்கும்.
இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் யாரும் செய்யாத பல அபிவிருத்தியை எனது அரசாங்கமே செய்திருக்கின்றது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர். இந் நிலையில் இந்த அடிப்படை வசதிகள், அபிவிருத்திகளை மேற்கொள்ள செலவாகும் தொகையை விட மூன்று முதல் 10 மடங்குகள் வரையில் கணக்குக் காட்டி எனது அரசின் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாக கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதிலிருந்தே குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. எனினும் இவ்வாறான திட்டங்களின் செலவுகளைக் கணிப்பது பிரபல பொறியியலாளர்களைக் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவினராலாகும்.
அதன் பின்னர் அந்த திட்டம் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைச்சரவையால் ஏற்படுத்தப்பட்ட டென்டர் குழுவினரால் ஆராயப்படும். அபிவிருத்தி வேலைத் திட்டம் தொடர்பில் வெளி நாடுகளுடன் கையெழுத்திடும் அனைத்து திட்டங்களுக்கும் சட்ட மா அதிபரின் அனுமதி பெறப்படுவது கட்டாயம் என்பதுடன் அதன் பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரமும் அவசியமாகும். இலங்கை மத்திய வருமானம் பெரும் நாடாக தற்போது பட்டியல் இடப்பட்டுள்ளதால் அபிவிருத்தி தொடர்பில் எம்மால் அபிவிருத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது. அதனால் எனது அரசு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான், சீனா மற்றும் இந்திய அரசுகள் வழங்கிய உதவிக் கடன்களை இத்திட்டங்களுக்கு பயன்படுத்தியது. இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச பொறியியல் சேவையாளர்களின் பூரண மேற்பார்வையின் கீழேயே முன்னெடுக்கப்படும்.
அப்படியானால் குற்றச் சாட்டுக்களை சுமத்துவோர் சொல்வது போன்று மூன்று முதல் 10 மடங்காக திட்டமிடப்பட்ட திட்டச் செலவினை கூட்டிக் காட்டி மோசடி செய்திருப்பின், குறித்த செயற்திட்டங்களுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள், சர்வதேச ஆலோசகர்கள், கடன் வழங்கியோர் என அனைத்து தரப்பினரும் இதனுடன் இணைந்து சதி செய்திருக்க வேண்டும்.
சில நபர்கள் மட்டுமன்றி பல நூறு பேர் இவ்வாறான திட்டங்கள் தொடர்பில் சம்பந்தப்படுவதால் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவது நடைமுறை சாத்தியமற்றது.
இந்த திட்டங்களை பொறுப்பேற்கும் நிறுவனம் அவற்றை உப ஒப்பந்த நிறுவனங்களிடம் கையளிப்பதாகவும் அதனால் திட்டத்தினை உப ஒப்பந்தகாரர்களை வைத்தே செய்து முடித்து விடலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். எனினும் நிர்மாண கலையை பொருத்தவரை சில விடயங்களை உப ஒப்பந்தக் காரர்களை வைத்து செய்ய முடியுமாக இருந்த போதிலும் முழு திட்டத்தினையும் பிரதான ஒப்பந்தக் காரரே பொறுப்பேற்க வேண்டும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு அபிவிருத்தி திட்டத்தின் பல்வேறு பகுதிகள் தொடர்பில் வெவ்வேறான நிறுவனங்களே நிதிப்பங்களிப்பை வழங்கும். அதிவேக பாதையின் இரு பகுதிகள் ஜப்பானின் கடனுதவியுடனும் ஒரு பகுதி சீனாவின் கடனுதவியுடனும் முன்னெடுக்கப்பட்டது. இங்கு விமர்சனத்துக்கு உள்ளாவது சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை தொடர்பில் மட்டுமேயாகும். கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக இந் நாட்டில் இருந்த அரசாங்கங்களுக்கு உதவி புரிந்த ஒரு சகோதர நாடே சீனாவாகும்.
ஒவ்வொரு சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் கடன் வழங்குவது தொடர்பிலான உண்மைத்தன்மையை உறுதி செய்யும் உள்ளக பொறிமுறைகள் உள்ளன. பல தசாப்தங்களாக எமது நாட்டுக்கு நட்போடு கைகொடுத்த ஒரு நாட்டை புண்படுத்தும் வகையில் நாம் நடந்துகொள்ள கூடாது என சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் யோசனை கூறுகின்றேன்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போதும் அதன் பின்னரும் இணையங்கள், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எவ்வித ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. எனது அரசாங்கத்தை சார்ந்தோர் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பர். உண்மை என்றேனும் ஒரு நாள் வெல்லும். என குறிப்பிடப்பட்டுள்ளது.