உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பல லட்சம்பேர் இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தங்களின் பேஸ் புக் கணக்குகளை தொடர்புகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் இந்த அளவுக்கு செயற்படாத மோசமானதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய பிரதேசங்கள் இந்த தொழில்நுட்பக் கோளாறால் அதிகம் பாதிக்கப்பட்டன.
பேஸ்புக்கின் படங்களை பகிர்ந்துகொள்வதற்கான சமூகவலைத்தளமான இண்ஸ்டாகிராமும் இதனால் பாதிக்கப்பட்டது.
லிசார்ட் ஸ்குவாட் என்கிற இணையதாக்குதல் குழுவினர் தாங்கள் தான் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டையும் செயற்படாமல் செய்ததாக அறிவித்துள்ளனர். ஆனால் பேஸ்புக் நிறுவனம் இதை மறுத்திருக்கிறது.
தாங்கள் தொழில்நுட்பத்தில் கொண்டுவந்த ஒரு மாற்றம் காரணமாகவே இந்த கோளாறு ஏற்பட்டதாக, பேஸ் புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தற்போது அந்த கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டுமே வழக்கம்போலவே தொடர்ந்து இயங்குவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.