தமிழீழ விடுதலைப் புலிகளை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு மோசமாக நடந்து கொள்கிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று புதன்கிழமை(21.12.2011) நாடாளுமன்ற கட்டடத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பசில் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்ற போதிலும், தம்முடன் மட்டுமே பேச்சுக்களை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற தவறான மனப்போக்கில் செயற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் சிலவேளைகளில் விரும்பியோ, விரும்பாமலோ போர் நடந்து கொண்டிருந்த போது கூட அரசாங்கத் தரப்புடன் வெளிநாடுகளில் பேச்சுக்களை நடத்த முன்வந்தனர். அத்துடன் போர்நிறுத்த உடன்பாடுகளைச் செய்து கொண்டு, திடீரெனப் போரை பிரகடனம் செய்யும் தந்திரங்களையும் கையாண்டனர் என குறிப்பட்டுள்ளார்.
முன்னர், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே என்ற ஆணவத்துடன் விடுதலைப் புலிகள் செயற்பட்டதாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கு கொள்வது அவசியம். ஆனால் கூட்டமைப்புடன் மட்டும் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவில் உள்ள சகல கட்சிகளுடனும் பேசி அவற்றின் இணக்கப்பாட்டுடன் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே, சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தமது மக்களின் நலனுக்காக சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவது போன்று, அதே வழியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்.
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் வடக்கில் சட்டபூர்வமான அரசியல் செய்வதை போன்று தெற்கிலுள்ள ஏனைய கட்சிகளும் வடக்கில் அரசியலில் ஈடுபடுவது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு உதவியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.