கிரிக்கெட்டையும் மூட நம்பிக்கைகளையும் பிரித்து பார்க்க முடியாது. சச்சின் அடித்து ஆடும்போது இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் இருக்க வேண்டும் என்பது நம்மில் பலபேர் வகுத்துக் கொண்ட எழுதப்பட்டாத நம்பிக்கை. எழுந்தால் எங்கே விக்கெட் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.
கும்ப்ளே-சச்சின்
டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கும்ப்ளே சாதனை படைத்தபோது நடந்த நிகழ்வு சிலருக்கு நினைவிருக்கலாம். ஒவ்வொரு ஓவரை கும்ப்ளே வீச வரும்முன்பாகவும், அவரின் தொப்பியை சச்சின் வாங்கி நடுவரிடம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால்தான் விக்கெட்டுகள் விழுந்ததாக இரு ஜாம்பவான்களும் இதுவரை நம்பிக் கொண்டுள்ளனர்.
அசாருதீன்
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அறியப்படும் அசாருதீனுக்கும் இப்படி ஒரு பழக்கம் இருந்தது. ஒவ்வொரு பந்தை சந்திக்கும் முன்பாகவும், பேட்டை சுழற்றிக் கொள்வார். விராட் கோஹ்லி பேட்டை சுழற்றுவது நம்மில் பலருக்கும் நினைவில் இருக்கும். அதேபோலத்தான், ஆனால், அசாருதீன் கொஞ்சம் மெதுவாக சுழற்றுவது வழக்கம்.
பக்கம் வந்து முத்தங்கள் தா ..
இலங்கையின் ரோஷன் மஹனமா, ஒவ்வொரு பந்தை சந்திக்கும் முன்பாகவும் பேட்டின் ஹேண்டில் முனையில் முத்தம் கொடுப்பது வழக்கம். மலிங்கா பந்தை முத்தம் கொடுப்பார்.
டாய்லெட் கழுவிய மெக்கன்சி
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரராக இருந்த நீல் மெக்கன்சி செய்வது கொஞ்சம் ஓவர்தான். அவர் பேட் செய்ய மைதானத்திற்குள் இறங்கும் முன்பாக, வீரர்களின் டிரஸ்சிங் ரூமிலுள்ள வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒருமுறை தண்ணீரை பீய்ச்சி அடித்துவிட்டு, அதன் மேல் சீட்டை மூடிவிட்டுதான் செல்வாராம்.
இதில் கொடுமை என்னவென்றால், இவர் பேட்டிங் செய்ய போகும் நேரத்தில் யாராவது டாய்லெட்டுக்குள் பேட்டிங் செய்துகொண்டிருந்தால் அவர்களை வெளியே வரச் சொல்லிவிட்டு தனது வழக்கமான வேலையை செய்துவிட்டுதான் மைதானத்தில் கால்வைப்பாராம். பாவம்தான் சக வீரர்கள்.
தாத்தா தந்த கர்சீப்
ஆஸ்திரேலியாவின் சக்சஸ்ஃபுல் கேப்டனான ஸ்டீவ் வாக், தாத்தா மேல் மிகுந்த பாசம் கொண்டவர். தனது தாத்தா கொடுத்த சிகப்பு நிற துண்டு துணியில்லாமல் மனிதர் மைதானத்தில் கால் வைக்க மாட்டார். அந்த துணிதான் தனது அதிருஷ்டத்திற்கு காரணம் என்பது ஸ்டீவ் வாக் நம்பிக்கை.
சச்சின் வழக்கம்
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை இந்த லிஸ்டில் விட்டுவிட முடியுமா, என்ன..? சச்சின் எப்போதெல்லாம் பேட் செய்ய களமிறங்கினாலும், முதலில் இடது காலுக்குதான் ‘பேட்’ கட்டுவதை வழக்கமாக கொண்டவர்.
அசைத்துவிட்டு அதிரடி
இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேனான சனத் ஜெயசூர்யா, ஒவ்வொரு பந்தை சந்திக்கும் முன்பாகவும், தனது ஹெல்மெட்டை கொஞ்சம் அசைத்துக் கொள்வார், காலில் கட்டியுள்ள இரு பேட்களையும் அப்படியும், இப்படியுமாக அசைப்பார்.
ஸ்ரீகாந்த்
ஒப்பனிங் பேட்ஸ்மேனாக கலக்கிய, மெட்ராஸ்காரரான ஸ்ரீகாந்த், களத்தில் இறங்கும்போது தனது ஜோடி ஆட்டக்காரரின் வலதுபக்கமாகத்தான் நடந்து செல்வார். முதலில் இடது காலில்தான் பேட் கட்டுவார். அடிக்கடி மேலே வானத்தை எட்டிப்பார்ப்பார். இந்த உலக கோப்பையில் யாரெல்லாம் என்னென் கூத்து பண்ணப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.