கமல்ஹாஸனின் நடிப்பில் உருவாகியுள்ள உத்தம வில்லன் படம் வரும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு கமல் ஹாஸன் நடிக்க ஆரம்பித்த படம் உத்தம வில்லன். படத்தை கடந்த செப்டம்பரிலேயே வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் சொன்ன தேதியில் வெளியிடவில்லை. அக்டோபர், டிசம்பர் என வேறு மாதங்களில் வெளியிடப் போவதாகச் சொன்னவர்கள், கடைசியாக பிப்ரவரி மாதம் வெளியிடப் போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் முழுக்க வேறு பெரிய படங்கள் வெளியாகக் காத்திருப்பதால், ஏப்ரல் 13-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
படத்தை வாங்கியுள்ள ஈராஸ் நிறுவனத்தின் கைவசம் வேறு பெரிய படங்கள் உள்ளதாலும் இந்த முடிவாம். ஏப்ரல் 14-ம் தேதி சித்திரைப் புத்தாண்டு என்பதால் அதையொட்டி படத்தை வெளியிடும் எண்ணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்.