Ad Widget

எண்ணெய் கசிவுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலுள்ள கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கல்லூரி முன்றலில் புதன்கிழமை(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

union

கல்லூரியின் பொதுக்கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதாக, தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமாரால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 10 நிமிடங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று வடமாகாண கல்வி அமைச்சால், குறித்த பாடசாலை நிர்வாகத்துக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மக்களுக்கு ஏற்கனவே போதியளவு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளது ஆகையால், நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சால் கூறப்பட்டுள்ளது.

சுன்னாகத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் நொர்தேன் பவர் நிறுவனத்தால் பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விட்டமையால் சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு தேவையான குடிநீரை வலிகாமம் வடக்குப் பிரதேச சபை, குடிநீர் தாங்கி வைத்து விநியோகம் செய்து வருகின்றது.

Related Posts