இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கைக்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.இதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, போன்ற மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் இந்த ஆழிப்பேரலை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முன் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரையோர மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களைத் தெளிவூட்டும் வகையில் இந்த ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், இன்று மாலை 3.30 அளவில் ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை சமிஞ்சை விடுக்கப்படும் எனவும், சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கையினால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், இந்த ஒத்திகை நடவடிக்கையின் போது இடர்முகாமைத்துவ நிலையத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்களுக்கு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய நிறைவேற்று பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு தினமான எதிர்வரும் 26ம் திகதி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தகவலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்டுள்ளார்.
ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த மற்றும் அனர்த்தங்களின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்மைய, எதிர்வரும் 26ம் திகதி முற்பகல் 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட நேரத்தில் இந்த மௌன அஞ்சலியை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கோரியுள்ளார்.