“நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இருந்து ஒருபோதும் படைகள் அகற்றப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார்.” – இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கண்டிக்கு சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயவர்த்தன தலைமைப் பீடாதிபதியை சந்தித்து ஆசி வேண்டினார்.
இதன்போதே மேற்கண்ட தகவல்களை அவர் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியது. இதன்போது வடக்கில் இருந்து இராணுவத்தை மீளப்பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிந்து விட்டது என்றும் கூறியது. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால வெற்றி பெற்றதும் வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேறுவர் எனக் கூறப்பட்டது.
இதில் எவ்வித உண்மையும் இல்லை. இராணுவத்தினரின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நாம் செய்து கொடுப்போம் – என்றார்.