யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை அடங்கலாக சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து வேலை செய்ய விரும்புவதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன், தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திர மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஆகியோரிடம் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தான் சில நாட்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தவை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு கிடைக்குமெனவும் அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்தார்.
மேலும், பெருந்தோட்ட பகுதிகளிலும் தமிழ் மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தப்போவதாக அவர் கூறினார்.
‘100 நாட்கள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், சகல பிரச்சினைகளையும் தீர்ப்பது சாத்தியமானதல்ல. ஆனால், என்னால் முடியுமான அளவுக்கு பல பிரச்சினைகளை தீர்க்க எனது முழு சக்தியையும் பிரயோகிப்பேன்’ என அவர் மேலும் கூறினார்.