இளமாணி ,முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் இந்தியாவில் தொடர்வதற்காக, கலாசார உறவுகளுக்கான இந்தியப்பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கையைச்சேர்ந்த 180 பேருக்கு உயர்கல்வி புலமைபரிசில்களை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது.
மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் உயர்கல்வியை தொடர்வதற்காக இவை வழங்கப்படுகின்றன.இலங்கை அரசின் உயர் கல்வி அமைச்சின் ஊடாகவே பயனாளர் தெரிவுகள் இடம்பெறும். இலங்கை அரசின் உயர் கல்வி அமைச்சு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
உயர் கல்வி அமைச்சின் இணையத்தளமான www.mohe.gov.lk எனும் முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட மேற்படி நான்கு வகைப் புலமைப்பரிசில்களுக்குமான விண்ணப்ப முடிவுத்திகதி 26 ஜனவரி 2015 ஆகும்.
தெரிவுசெய்யப்படக் கூடிய தகைமை வாய்ந்தவர்கள் தெரிவு நடைமுறை மற்றும் தகைமை நிபந்தனைகள் பற்றி அறிய இலங்கை அரசின் உயர்கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெறலாம்.
புலமைப்பரிசில் விபரங்கள் வருமாறு:
நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம் – மருத்துவம் தவிர்ந்த ஏனைய இளமாணிக் கற்கைகளான பொறியியல், விஞ்ஞானம் ,வியாபாரம், பொருளியல், மனிதப்பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம் -முதுமாணிக் கற்கைக்காக பொறியியல் ,விஞ்ஞானம், வர்த்தகம், மனிதப்பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் பொறியியல் விஞ்ஞானம் மற்றும் விவசாய கற்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சுதேச வைத்தியம் உள்ளிட்ட மருத்துவக் கற்கைகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
ரஜீவ் காந்தி புலமைப்பரிசில் – தகவல் தொழில் நுட்ப’ துறையில் பொறியியல் இளமாணி மற்றும் தொழில்நுட்ப இளமாணிப் பட்டம் ஆகிய இளமாணிப் பட்டங்களுக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டம்: மருத்துவம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் முதுமாணி மற்றும் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு 5 இடங்கள் ஒதுகக்கப்பட்டுள்ளன.இந்திய அரசானது இப்புலமைப்பரிசில்களுக்கு இலங்கைப் பிரஜைகளை திறமை அடிப்படையில் தெரிவு செய்யும்.
இந்தியாவின் மிகஉயர்ந்த ஒருசில பல்கலைக்கழகங்களில் ஆய்வு உள்ளிட்ட உயர்கல்வி கற்பதற்காக இலங்கை அரசின் உயர்கல்வி அமைச்சினுடைய ஆலோசனைகளின் படி புலமைப்பரிசில் பெறும் நபர் தெரிவு செய்யப்படுவார்.
எல்லாப் புலமைப்பரிசில்களும் கல்விக்காலம் முழுமைக்குமான முழுமையான கல்விக்கட்டணத்துடன் மாதாந்த செலவுப்படிகளை உள்ளடக்கும். மேலும் தங்குமிடக்கொடுப்பனவுடன் புத்தகம் மற்றும் வருடாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும்.
இவை தவிர இந்தியாவிலுள்ள கலாசார உறவுகளுக்கான இந்தியப்பேரவையின் அனைத்துப் புலமையாளருக்கும் சிறுசிறு உதிரி நன்மைகளுக்கு மேலாக முழுமையான சுகாதார வசதிகள் இந்தியாவில் மிகக்கிட்டிய விமான நிலையத்திற்கான விமானப் பயணச்சீட்டு கட்டணம் நாட்டின் பல பாகங்களுக்கான கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்தக் கொடுப்பனவு என்பன வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் புலமைப்பரிசில் பற்றிய மேலதிக விபரங்களை பெறுவதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை அணுகலாம். அத்துடன் தூதரக www.cgijaffna.org பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.