Ad Widget

பாரிஸ் தாக்குதல்களில் பலியானோருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி

பாரிசிஸ் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

paris_funera

மேலும் பாரிசில் நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பிறகு முதல் முறையாகக் கூடிய அந்நாட்டின் தேசிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 17 பேருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் பிரெஞ்சு தேசிய கீதமான “மார்செய்ல்ஸ்” கீதத்தைப் பாடினார்கள்.

தேசிய நாடாளுமன்றத்தில் பேசிய பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ், அசாதாரணமான சூழ்நிலையை சமாளிக்க அசாதாரணமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றார். பிரான்ஸ் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராகத்தான் இருக்கிறதே தவிர இஸ்லாத்துக்கு எதிராக இல்லை என்றார் அவர்.

நையாண்டிப் பத்திரிக்கையான “ஷார்லி எப்டோ”வின் அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு போலீசார் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். ஒரு காவல்துறை அதிகாரி தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யூதர்கள்

இதனிடையே, பாரிஸின் புறநகர்ப் பகுதியான மாண்ட்ரூகில் யூத பல்பொருள் அங்காடியில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட 4 யூதர்களின் இறுதி ஊர்வலம் இஸ்ரேலில் நடைபெற்றுள்ளது.

இதில் பல அரசியல்வாதிகளும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த நால்வரும் யூதர்கள் என்பதால் அவர்களின் வாழ்க்கை பாதியிலேயே பறிக்கப்பட்டுவிட்டதாகவும், இதற்கு வெறுப்புதான் முக்கியக் காரணம் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நேதன்யாஹு கூறியுள்ளார்.

யூதர்கள் உலகின் எந்த ஒரு பகுதியிலும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று தான் விரும்புதாகவும் அவர் குறிப்பிட்டார். அதே நேரம் யூதர்களின் வரலாற்று பூர்வ இடம் இஸ்ரேல் என்பது யூத மக்களுக்குத் தெரியும் என்றும், அனைத்து யூதர்களையும் திறந்த மனதோடு இஸ்ரேல் வரவேற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் யூதர்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுவது ஏற்க முடியாத ஒன்று என இஸ்ரேலிய அதிபர் ரூவென் ரிவ்லென் இறுதி ஊர்வலத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

Related Posts