காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றதாலேயே இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைய நேரிட்டது என்று அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலை நடத்துங்கள் என்று கூறியதுடன் தேர்தல் நாளை குறித்து கொடுத்தும் மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தேர்ந்தெடுத்தது, வாக்களிக்கக் கூட ‘நல்ல’நேரம் பார்த்தது என சகலமுமாக இருந்தவர் சுமணதாச அபேகுணவர்த்தன.
ஆனால் இந்த சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவின் ஆரூடம் எதுவும் பலிக்காமல் மண்ணைக் கவ்வினார் மகிந்த ராஜபக்சே.
தற்போது ராஜபக்சேவின் தோல்விக்கு புது வியாக்யானத்தையும் வெளிப்படுத்த தொடங்கியுள்ளார் சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சுமணதாச அபேகுணவர்த்தன அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நாஸ்டர்டாமின் கணிப்புகள் ஆருடங்கள் அனைத்தும் உண்மையாகிவிடுவதில்லைதானே.. மகிந்த ராஜபக்சே 5% வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்திருக்கிறார்.
அதிபராவதற்கு அதிர்ஷ்டம் என்பது அவசியம். நான் பொதுவாக ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்கிற நபர். நட்சத்திரங்களில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் நடந்துள்ளது.
தற்போது எங்களுடைய சாரின் (ராஜபக்சே) ஜாதகத்தைவிட எதிர்க்கட்சிகளின் ஜாதகம்தான் வலுவாக இருக்கிறது.
எனக்கு மைத்ரிபால சிறிசேனவும் கூட நல்ல நண்பர்தான்…
2013ஆம் ஆண்டு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக ராஜபக்சேவை பதவி ஏற்க வேண்டாம் என்று எச்சரித்தேன்.. ஏனெனில் அது முள் கிரீடம்… 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா பிரதமராக இருந்த ஜூலியா கில்லார்டு அதன் தலைவராக இருந்தார்.. ஆனால் அவருக்கு என்ன நடந்தது? ( நாடாளுமன்றத் தேர்தலில் கில்லார்டு தோல்வி அடைந்தார்).
அவருக்கு நடந்ததுதான் எங்க “சாருக்கும்” நடந்துள்ளது. இவ்வாறு சுமணதாச அபேகுணவர்த்தன கூறியுள்ளார்.